சீனா உளவு பார்த்ததாக இருவருக்கு எதிராக பிரிட்டன் பொலிஸார் வழக்கு
சீனாவுக்காக உளவு பார்த்ததாக இருவர் மீது பிரிட்டன் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 29 வயதுடைய இருவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறி சீனாவுக்கு பாதகமான தகவல்களை வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மிகவும் சிக்கலானதாக உள்ளதாக பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைத் தலைவர் கமாண்டர் டொமினிக் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரித்தானிய உளவுத்துறையை சீனா திருட முயற்சிப்பதாக கூறப்படுவது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என பிரித்தானியாவிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சீன எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரிட்டனைக் கேட்டுக் கொள்வதாகவும் சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் உளவு நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் கவலை மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.