இலங்கைக்கான பயண திட்டங்களை மாற்றியமைத்து பிரித்தானியா!
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது இலங்கைக்கான பயண ஆலோசனையை ஏப்ரல் 5, 2024 முதல் திருத்தியுள்ளது.
இந்த புதுப்பிப்பு அவசர மருத்துவ சேவைகளுக்கான அணுகல், நுழைவு பாதுகாப்பு தேவைகள், சாலை பாதுகாப்பு, ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதி அணுகல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது என்று ஜனாதிபதியின் ஊடக பிரிவு (PMD) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஆலோசனையில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பான முந்தைய கவலைகள் இல்லை. கூடுதலாக, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை போன்ற சுகாதார சேவைகளில் வரம்புகள் தொடர்பான முன்னர் குறிப்பிடப்பட்ட அபாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், முன்னைய ஆலோசனைகளில் இருந்து எதிர்மறையான தகவல்களை நீக்குமாறு பிரித்தானிய அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக வாதிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய முன்னேற்றம் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு தெளிவான புரிதல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
ஜனவரி 1 மற்றும் மார்ச் 27 க்கு இடையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து மொத்தம் 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த மேம்படுத்தப்பட்ட ஆலோசனையானது இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.