குடிநுழைவு விதிகளை கடுமையாக்கியுள்ள பிரேசில்
அடுத்த வாரம் முதல் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான விதிகளை பிரேசில் கடுமையாக்கும் என்று பிரேசிலிய அரசாங்கம் புதன்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் செல்லும் வழியில் புலம்பெயரும் எண்ணத்துடன் உள்ள பயணிகள் பிரேசிலை ஒரு நிறுத்தமாகப் பயன்படுத்துவது அதற்குக் காரணம்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல், பிரேசிலிய விசா இல்லாத வெளிநாட்டுப் பயணிகள் அந்நாட்டில் தங்காமல் வேறொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
பிரேசிலில் தங்கும் வெளிநாட்டுப் பயணிகளின், குறிப்பாக ஆசியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஆசியாவிலிருந்து, அவர்கள் பிரேசிலுக்கு வரும்போது சில காலம் தங்கிய பிறகு அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கு அடைக்கலம் நாடி விண்ணப்பிக்கின்றனர் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இப்போது, விசா இல்லாத பயணிகள் பிரேசிலில் தங்க அனுமதியில்லை.புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பிரேசிலில் அடைக்கலம் நாடுவதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் மற்றும் ஒரு மூத்த காவல்துறை அலுவலம் ஆகியவற்றின் அறிக்கைகள் கூறுகின்றன.
அவர்கள் பிரேசிலில் தங்குவதற்கு அடைக்கலம் கிடைத்தவுடன், பலர் பெரும்பாலும் வடக்கே தரை வழியாக பயணம் செய்து, முக்கியமாக அமெரிக்காவுக்கும் அல்லது கனடாவுக்கும் கொலம்பியாவையும் பனாமாவையும் இணைக்கும் ஆபத்தான டேரியன் இடைவெளி வழியாக செல்கிறார்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
“அவர்கள் ஓர் உத்தரவாதத்துக்காக பிரேசிலில் அடைக்கலம் நாடுகிறார்கள்,” என்று கூறிய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “ஒருவேளை அவர்கள் அமெரிக்க எல்லையில் பிடிபட்டால், அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக பிரேசிலுக்கு அனுப்பப்படுகிறார்கள்,” என்றும் விவரித்தார்.
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை, பிரேசிலின் பரபரப்பான அனைத்துலக விமான நிலையத்தில் அடைக்கலம் நாடி 8,300க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன என்று அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தக் கோரிக்கைகளில், 117 பேர் மட்டுமே பிரேசிலின் தேசிய இடம்பெயர்வுக் குறியீட்டில் அங்கேயே தங்குபவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
“அதாவது விமான நிலையத்தில் தஞ்சம் கோரிய 99.59 விழுக்காட்டினர் அதாவது 8,210 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் அல்லது வழக்கமற்ற முறையில் தங்கியுள்ளனர்,” என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.அந்த காலகட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்தியா, வியட்னாம், நேப்பாளம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய நீதித்துறை அமைச்சர் ஜீன் உயிமா தெரிவித்தார்.
பகுப்பாய்வு செய்யப்பட்ட அடைக்கலக் கோரிக்கைகளில், கிட்டத்தட்ட 17 விழுக்காட்டினர், 30 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறியதை அறிக்கை ஒன்று காட்டியது. அவர்களில் பெரும்பாலோர் பெரு நாட்டின் எல்லையில் உள்ள ஆர்ஸ் மாநிலத்தின் மூலம் வெளியேறியுள்ளனர் என்று ராய்ட்டர் செய்தி கூறியது.