தகுதி போட்டியின் போது பிரேசில் – அர்ஜெண்டினா ரசிகர்கள் மோதல்: விசாரணையை தொடங்கிய FIFA
அர்ஜெண்டினா – பிரேசில் இடையே உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின்போது, இரு அணி ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.
2026ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. பிரேசில் – அர்ஜெண்டினா இடையேயான போட்டி பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரியோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, இருநாட்டு ரசிகர்களும் திடீரென மோதிக் கொண்டனர்.
இதையடுத்து அர்ஜெண்டினா வீரர்கள், மோதல் நடந்த பகுதிக்கு சென்று ரசிகர்களை அமைதிப்படுத்தினர். இதனால் போட்டி தொடங்குவதற்கு 10 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரேசில் கால்பந்து சங்கம் (CBF), அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் (AFA) ஆகியவற்றின் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக FIFA தெரிவித்துள்ளது.
FIFA ஒழுங்குமுறை விதிகள் 17.2 மற்றும் 14.5 ஆகியவற்றின்படி கூட்டத்தால் தொந்தரவு, போட்டிக்கு தாமதம் ஏற்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக அர்ஜெண்டினா ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளது. இதேபோல் விதி 17ன் படி, ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மீறியதாக பிரேசில் விசாரணையை எதிர்கொண்டுள்ளது.
மைதானத்தில் ரசிகர்களின் மோதலால் மிக நீண்ட நேரத்துக்குப் பின்னர் தொடங்கிய இப்போட்டியின் 63வது நிமிடத்தில் நிக்கோலஸ் ஒட்டமெண்டி அடித்த கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.