மலேசியாவில் மருத்துவமனை வாயிலில் வீசப்பட்ட குண்டு காயங்களுடனான இறந்தவரின் உடல்

மலேசியாவின் இஸ்கந்தர் புத்திரி பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஒரு பயங்கர கொள்ளை முயற்சி ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது. சுல்தானா அமினா மருத்துவமனையில் அவர் பின்னர் இறந்து கிடந்தார்.
ஜூலை 3 நள்ளிரவு 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது, முகமூடி அணிந்திருந்த நான்கு நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு வெட்டுக்கத்தியுடன், Second Link Expressway அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தை வழிமறிக்க முயன்றனர்.
இந்தத் துணிச்சலான தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அந்த நபர்கள்உடைப்பது தெரிகிறது.இதற்குப் பதிலடியாக, காரில் இருந்த பயணிகளில் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார். இதனால், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். மூன்று சந்தேக நபர்கள் தங்களின் வாகனத்திற்குத் திரும்ப ஓடினர், நான்காமவர் தப்பியோடினார்.
கொள்ளை முயற்சி நடந்த சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுல்தானா அமினா மருத்துவமனையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
“பின்னிரவு 1.40 மணியளவில், பல துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஒரு நபரின் உடல் அங்கு கிடப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருவர் இருண்ட நிற வாகனத்தில் உடலை மருத்துவமனை நுழைவாயிலில் விட்டுச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின,” என்று குமார் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இறந்தவர் பின்னர் கெடா மாநிலம், சுங்கை பெட்டானியைச் சேர்ந்த 42 வயது உள்ளூர்வாசி என்றும் அவர் மீது நான்கு குற்றப்பதிவுகள் உள்ளன என்றும் குமார் மேலும் கூறினார்.அந்த நபரின் நெஞ்சிலும் வயிற்றிலும் ஏற்பட்ட பல துப்பாக்கிக்குண்டு காயங்களால் அவர் உயிரிழந்தது உடற்கூராய்வில் உறுதிசெய்யப்பட்டது என்றும் குமார் தெரிவித்தார்.
இறந்தவர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரா என்று கேட்கப்பட்டபோது, விசாரணை இன்னும் தொடர்கிறது என்று குமார் பதிலளித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையைத் தொடர்ந்து, அதே நாள் இரவு 7 மணியளவில் கோலாலம்பூரின் டாங் வாங்கி பகுதியில் மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.30 முதல் 40 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் இருவரும் இந்திய நாட்டவர் ஒருவரும் ஜோகூர் காவல்துறை தலைமையகம், இஸ்கந்தர் புத்திரி மாவட்ட காவல்துறையின் கூட்டுப் படையால் கைதுசெய்யப்பட்டனர், என்று திரு குமார் தெரிவித்தார்.