ஒடிசாவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு; நால்வர் பலி,7 பேர் மாயம்!
ஒடிசாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் மகாநதி ஆறு உள்ளது. இங்கு அரசிடம் அனுமதி பெற்று ஏராளமான பயணிகள் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் சில படகுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் 50க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் மகாநதி ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு அதிகரித்த நிலையில், நிலைதடுமாறி, படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா மாநில பேரிடர் அதிவிரைவு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் 48 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இருப்பினும் 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்ததால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று காலை வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமான மேலும் 7 பேரை தேடும் பணிக்காக ஸ்கூபா வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.