கறுப்பின இராணுவ அதிகாரி நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் – பென்டகனில் 5,400 ஊழியர்கள் நீக்கம்

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் கறுப்பின உயர் அதிகாரி சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியரை ஜனாதிபதி டொனால் டிரம்ப் பதவி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
டிரம்ப் பதவியேற்ற பிறகு அவரது பல அதிரடி முடிவுகள் சர்சையாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிரம்ப் நிர்வாகம், ராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் விமானப்படை ஜெனரல் சி.க்யூ.பிரவுன் ஜூனியரை நேற்று முன் பணிநீக்கம் செய்து அறிவித்தது.
பிரவுன், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக அதிபருக்கு ஆலோசனை வழங்கும் கூட்டு பணியாளர்கள் குழு தலைவராகவும் இருந்தவர்.
அதோடு, அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே ஜேஎஸ்சி தலைவராக பதவி வகிக்கும் 2வது கறுப்பின ஜெனரலாகவும் சாதனை படைத்தவர். தனது 16 மாத பதவிக்காலத்தில் பிரவுன் உக்ரைன், மத்திய கிழக்கு போர் விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர். இவரது பணி நீக்கம் பென்டகனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இராணுவத்தில் பன்முகத்தன்மை, சமத்துவத்தை விரும்பும் நபர்கள் குறிவைத்து நீக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
கடந்த 2020ல் அமெரிக்காவின் கறுப்பினத்தவர் ஒருவர் வெள்ளையின பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அ
ப்போது கறுப்பினத்தவர்களின் இயக்கத்திற்கு பிரவுன் ஜூனியர் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுபோன்ற நிகழ்வுகளால் அவரை டிரம்ப் ஓரம் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஜெனரல் சார்லஸ் பிரவுன் நாட்டிற்காக 40 ஆண்டுகள் செய்த சேவைக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் சிறந்த மனிதர், சிறந்த தலைவர்.
அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்’’ என கூறி உள்ளார். இதுதவிர, கடற்படையில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அட்மிரல் லிசா பிரான்செட்டி, விமானப்படை பணியாளர்களின் துணைத் தலைவர் ஜெனரல் ஜிம் ஸ்லைப் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். டிரம்பால் பதவி நீக்கப்படும் 2வது பெண் உயர் அதிகாரி லிசா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் 5,400 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் தொடங்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல அரசு துறைகளில் பணியாளர்கள் எண்ணிக்கையை டிரம்ப், மஸ்க் இருவரும் கணிசமாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.