நியூயோர்க்கில் 38.1 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பைபிள்
நியூயோர்க்கில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிப்ரூ மொழி விவிலிய நூல் (பைபிள்) ஒன்று 38.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடந்த ஏலத்தில் மிக அதிக விலையில் விற்கப்பட்ட கையெழுத்துப் பிரதி என்ற சாதனையையும் அது படைத்தது.
கோடெக்ஸ் சாஸூன் (Codex Sassoon) என்ற அந்தப் பைபிள் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள் ஏறக்குறைய எழுதிமுடிக்கப்பட்டு இன்றுவரை இருக்கின்றது.
அந்த ஏலம் இருவருக்கு இடையே 4 நிமிடங்களுக்கு நடந்ததாக ஏலத்தை நடத்திய Sotheby’s நிறுவனம் தெரிவித்தது. அமெரிக்காவின் லாபநோக்கமற்ற அமைப்பொன்றின் சார்பில் அமெரிக்காவின் முன்னாள் தூதர் அல்பிரெட் மோசஸ் (Alfred Moses) அந்த பைபிளை வாங்கினார்.
அது இஸ்ரேலின் டெல் அவிவிலுள்ள (Tel Aviv) யூத மக்களின் ANU அருங்காட்சியகத்துக்குப் பரிசாக வழங்கப்படும் என நிறுவனம் கூறியது.
இதற்குமுன்னர் 1994ஆம் ஆண்டு Leonardo da Vinci’s Codex Leicester கையெழுத்துப் பிரதிக்கு Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) 30.8 மில்லியன் டொலர் ஏலத்தொகை கொடுத்தார். ஆனால் அந்தத் தொகையை இந்தப் பைபிளுக்கான ஏலம் மிஞ்சிவிட்டது.