பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு! விமானம் மீது மோதிய வேன்

பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ஊழியர்களை கொண்டு சென்று விடவும், அங்கிருந்து அழைத்து வரவும் வேன் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று பகல் 12.15 மணிக்கு விமான நிலைய ஊழியர்களை அழைத்து வரும் வேன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பகுதியில் சென்றது.
அப்போது அங்கு வாகன நிறுத்த (பார்க்கிங்) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானத்திற்கு அடியில் அந்த வேன் சென்றது.
அப்போது விமானத்தின் மூக்கு பகுதியில் வேனின் மேற்பகுதி உரசியது. இதில் அந்த விமானத்தின் மூக்கு பகுதி லேசாக சேதம் அடைந்தது.
இந்த சம்பவத்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் மீது மோதிய வேனில் டிரைவர் தவிர வேறு யாரும் இல்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. வேன் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.