துருக்கியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ரஷ்யாவின் அழகான பைக்கர்!
ரஷ்யாவின் மிகவும் அழகான பைக்கர் என்று அழைக்கப்படும் ஓசோலினா, துருக்கி நாட்டில் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பைக் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பைக்கில் சாகசம் செய்வோருக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு இருக்கிறது. அப்படி பைக் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாக இருந்தவர் தான் “மோட்டோ தான்யா” 38 வயதான இவரை ரஷ்யாவின் அழகான பைக்கர் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கூறுவார்கள். இதற்கிடையே இவர் துருக்கி நாட்டில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் துருக்கியில் தனது சிவப்பு நிற பிஎம்டபிள்யூ பைக்கை ஒட்டிச் சென்ற நிலையில், டிரக் ஒன்றில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இன்ஸ்டாகிராமில் “மோட்டோ தான்யா” என்று அழைக்கப்படும் இவரது பெயர் டாட்டியானா ஓசோலினா.. இவர் துருக்கியின் முகலாவில் இருந்து போட்ரம் என்ற இடத்திற்குத் தனது சிவப்பு நிற BMW S1000RR 2015 பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது வழியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவரது பைக் அருகே வந்த டிரக் ஒன்றின் மீது மோதி இருக்கிறது.
விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இருப்பினும், அதற்கு ஓசோலினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடன் பயணித்த துருக்கி நாட்டை சேர்ந்த பைக்கர், ஒனூர் ஒபுட் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு பைக்கர் எந்தவொரு காயமும் இல்லாமல் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசமான விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் மோட்டோ தான்யா என்று அழைக்கப்படும் ஓசோலினாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்கள் உள்ளன. அதேபோல யூடியூப்பிலும் 20 லட்சம் பேர் இவரது பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள்.”ரஷ்யாவின் மிக அழகான பைக்கர்” என்றே இவரை பலோயஸ்ர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ரஷ்யா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு பைக் சாகசங்களில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஓசோலினா விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஐரோப்பாவிற்குள் நுழையத் தன்னை மறுத்துவிட்டதாகக் கூறி அதில் அவர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ஐரோப்பாவுக்குச் செல்ல முடியவில்லை என்றும் இருப்பினும் இதுபோல நடக்கும் என முன்கூட்டியே தெரியும் என்பதால் பெரியளவில் வருத்தம் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், ஐரோப்பாவுக்குப் பதிலாகத் துருக்கி நாட்டில் பைக் ரைட் செல்ல உள்ளதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.