சருமம் மற்றும் நகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்
சமீப காலங்களில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்னிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமான நபர்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதம், இதய கோளறுகள் ஆகியவை ஏற்படுவதை காண்கிறோம். வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமடையலாம் என கருதப்படுகின்றது. இது பீதியை கிளப்பும் விஷயமாக உள்ளது.
இதய பிரச்சனைகளை தடுப்பதற்கும், அதன் பக்க விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் அது குறித்த சரியான புரிதல் இருப்பது அவசியமாகும். இதற்கு மாரடைப்பின் சரியான அறிகுறைகளை கண்டறிவது அவசியம். இந்த பதிவில் இதை பற்றி புரிந்துகொள்ளலாம்.
இதயத்தில் நடக்கும் தொந்தரவுகளை அடையாளம் காண உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், அவற்றை பொதுவாக சிறிய விஷயமாகக் கருதி மக்கள் புறக்கணித்து விடுகிறார்கள். எனினும், இப்படிபட்ட அறிகுறிகளை கண்டால், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிக அவசியம். நகங்கள் மற்றும் சருமத்தில் தெரியும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
நகங்களில் வெள்ளை புள்ளிகள்
உங்கள் நகங்களில் (Nails) வெள்ளைப் புள்ளிகள் தென்பட்டால், அது இதயப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். வெள்ளைப் புள்ளிகள் பொதுவாக உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகின்றன. ஆனால் அவை மறையாமல் தொடர்ந்து நகங்களில் இருந்தால், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையால் இதய நோய் வருவதற்கான அறிகுறியாக இதை எடுத்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
நகங்கள் நீலமாதல்
நகங்களின் நிறம் இயல்பை விட நீலம் அல்லது ஊதா நிறமாக மாறினால் அல்லது இந்த நிறத்தின் கோடுகள் தெரிந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது இதய செயலிழப்பு, சுவாச பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இதயத்தில் கோளாறு உள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
தோலில் லேசான அல்லது கருமையான புள்ளிகள்
சருமத்தில் (Skin) லேசான அல்லது கருமையான அடர் புள்ளிகள் தோன்றினால், குறிப்பாக கால்கள் மற்றும் கைகளின் தோலில் இவை தோன்ற ஆரம்பித்தால், அது இதய நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சருமத்தின் நிறம் மாறுவதும், திடீரென புள்ளிகள் உருவாவதும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக நடக்கவில்லை என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றன. இவை இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான சருமம்
இரத்த ஓட்டம் சரியாக நடக்காதபோது, தோல் வெளிர் நிறமாக மாறும். மேலும் அது வறண்டு போகும் நிலையும் ஏற்படலாம். தோலில் குளிர்ச்சியை உணரலாம். இவை இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக இதயம் தொடர்பான பிரச்சனைகளின் ஆரம்ப கட்டங்களில் தோன்றும். இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை கண்டு ஆலோசிப்பது நல்லது.
விரல்களில் கட்டி
உங்கள் விரல்களில் பல நாட்கள் நீடிக்கும் வலிமிகுந்த கட்டிகள் இருந்தால், அதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இவை கொலஸ்ட்ரால் அளவு வரம்பை தாண்டிவிட்டதைக் குறிக்கலாம். இந்த நிலை இதயத்தை பலவீனப்படுத்துகிறது. உடலில் உள்ள அனைத்து கட்டிகளும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அவை மீண்டும் மீண்டும் ஏற்படுவது உடலில் வளரும் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால், அடிக்கடி கட்டிகள் வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.