பால்டிமோர் பால விபத்து: கால்வாயிலிருந்து கப்பலை அகற்றும் பணி தீவிரம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்குக் கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலின் பாகங்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 19) தெரிவித்தனர்.
பால்டிமோர் பாலம் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் ஸ்காட் கி பிரிட்ஜ் இடிந்து விழுந்ததிலிருந்து அந்தத் துறைமுகம் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து ரத்துச் செய்யப்பட்டது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைத்திருக்கும் மிகவும் முக்கியமான துறைமுகத்தின் சேவை முடங்கியது.
விபத்துக்குள்ளான ‘டாலி’ எனும் சரக்குக் கப்பலை உள்ளூர் கடல் முனையத்தை நோக்கி நகர்த்தும் பணி திங்கட்கிழமையன்று (மே 20) தொடங்கும் எனக் கப்பலின் பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் தெரிவித்தன.
கால்வாயில் விழுந்த பாலத்தின் பாகங்களையும் கப்பலையும் அகற்றும் பணியில் பணியாளர்கள் மே மாதத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் இதன்மூலம் அமெரிக்காவில் கார் ஏற்றுமதிக்கான முக்கியத் துறைமுகத்திற்கான முழு அணுகலை மீட்டெடுக்க முடியும் எனவும் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் என்பிசியிடம் தெரிவித்தார்.
மேலும், “விரைவில் நாங்கள் அந்தச் சரக்குக் கப்பலைக் கால்வாயிலிருந்து அகற்றி விடுவோம். மே மாத இறுதியில் அந்தக் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்,” என திரு மூர் நம்பிக்கையோடு கூறினார்.
விபத்திற்குப் பிறகு நான்கு தற்காலிக கால்வாய்களைக் கப்பல் போக்குவரத்திற்காக அதிகாரிகள் திறந்துள்ளனர்.