ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்
ஆஸ்திரேலியாவில் நிர்மாணத் துறையில் பாரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க போதுமான ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் துறையில் நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் தற்போது தேவைப்படுவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் பல மடங்காக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் எரிசக்தித் திட்டங்கள் அதிகரிக்கும் போது பல இலட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் எனப் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறை தற்போது குறைந்த வளங்களைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் உள்கட்டமைப்புத் துறைக்கு பொறுப்பான தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் காப் தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பெரிய அளவிலான எரிசக்தி, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அவசியம். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தித் திறன் குறைவதால் அவை ஆபத்தில் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.




