ஆஸ்திரேலியாவில் மும்மடங்காக அதிகரித்த காட்டுத்தீயின் அளவு ; ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீச் சம்பவங்கள் கட்டுக்கடங்காத நிலையை டிசம்பர் 21ஆம் திகதி எட்டிவிட்டதால் ஆக உயர் அபாய மதிப்பீடாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிராம்பியன்ஸ் தேசிய பூங்கா அருகே உள்ள பகுதிக்கு அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 495 பேர் அங்கு வசித்து வருகின்றனர்.
“உடனே வெளியேறுவதுதான் ஆகப் பாதுகாப்பான தெரிவு. இல்லையென்றால் நிலைமை மிகவும் ஆபத்தாகிவிடும்,” என்று விக்டோரிய அவசரச் சேவைப் பிரிவு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.
ஒரு குறிப்பிட்ட தீச்சம்பவம் டிசம்பர் 17ஆம் திகதி மின்னல் பலமுறை தாக்கியதன் காரணமாக ஏற்பட்டது. ஆனால், இரவு முழுக்க அந்தத் தீ பரவி 28,000க்கும் மேற்பட்ட ஹெக்டர் நிலத்தை நாசமாக்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீச்சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 400 தீயணைப்பு அதிகாரிகள் போராடி வருவதாக ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது. இதற்காக அவர்கள் 100 டேங்கர்களுடன் 25 வானூர்திகளைப் பயன்படுத்துவதாகவும் அது குறிப்பிட்டது.
ஆஸ்திரேலிய கோடைக்காலத்தில் அதிக அபாய நிலையில் காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது