ஆஸ்திரேலியாவில் மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் ; பிரதமர் அல்பனீஸ்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிவித்து உள்ளார்.
தேர்தலையொட்டி ஐந்து வார பிரசாரம் நடைபெறும் என்றும் அவர் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அல்பனிசில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.ஆனால், தற்போதைய நிலவரப்படி அந்தக் கட்சியின் செல்வாக்கு சரிவடைந்துவிட்டது.அதனால், எதிர்த்தரப்பு சுதந்திர-தேசிய கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களிடம் தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய பிரதமர் அல்பனிஸ், “எங்கள் அரசாங்கம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.
“வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றி அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்,” என்றார்.