இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்க தயாராகும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறைக்காக 27.5 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கைக்கு பெற்றோலியப் பொருட்களை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கையின் ஊடாக ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் ஆரம்ப முதலீடாக 27.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேற்கொண்டுள்ளதாக முதலீட்டுச் சபையிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமை யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு உள்ளது.
ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் பொருளாதார நெருக்கடியின் விளைவாக எரிபொருள் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்ட பின்னர் இலங்கை சந்தைக்குள் பிரவேசித்துள்ளது.
யுனைடெட் பெட்ரோலியம் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களைக் கொண்ட முன்னணி பெட்ரோலிய வர்த்தக நிறுவனமாக கருதப்படுகிறது.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் இயக்குநராக CEYPETCO இன் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரும் பெட்ரோலிய துறையில் நன்கு அறியப்பட்ட நிபுணருமான டாக்டர் பிரபாத் சமரசிங்கவை நியமித்துள்ளது.