பயங்கரவாத அச்சுறுத்தல் அளவை உயர்த்திய ஆஸ்திரேலியா…
ஆஸ்திரேலியா அதன் பயங்கரவாத மிரட்டல் நிலையை ‘நிகழக்கூடியது’ என்று உயர்த்தியுள்ளது.முன்னதாக அது ‘நிகழும் சாத்தியம் உள்ளது’ என்ற நிலையில் இருந்தது.
அந்நாட்டில் தீவிரவாதக் கண்ணோட்டம் அதிகரித்திருப்பதாகவும், அதனால் அடுத்த 12 மாதங்களில் நிலத் தாக்குதலைத் திட்டமிடுவதற்கு 50 சதவீத்த்திற்கும் மேல் சாத்தியம் உள்ளதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்தது.
பாதுகாப்புச் சேவைகளின் ஆலோசனையைப் பின்பற்றி, நாட்டில் மிரட்டல் நிலையை உயர்த்தியதாக பிரதமர் அண்டனி அல்பனிஸ் கூறினார். இருப்பினும், உடனடி மிரட்டல் எதுவும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மிரட்டல் நிலையை ‘நிகழும் சாத்தியம் உள்ளது’ என்ற நிலைக்குக் குறைத்தது. அதற்கு முன்னர், எட்டு ஆண்டுகளுக்கு அது ‘நிகழக்கூடியது’ என்ற நிலையில் இருந்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய சண்டை உட்பட மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றநிலை மிரட்டல் நிலை உயர்த்தப்பட்டதற்கு ஒரு காரணம் என்று ஆஸ்திரேலியப் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் மைக் புர்கஸ் கூறினார்.
அண்மை மாதங்களில், ஆஸ்திரேலியாவில் சில கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் சில தீவிரவாதத்தால் தூண்டப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சிட்னியில் அஸ்ஸிரியன் தேவாலயத்தின் பேராயர் மீதும், அவரைப் பின்பற்றும் சிலர் மீதும் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.அது, சமய தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட பயங்கவராதச் செயல் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.