பொன்டி கடற்கரைத் தாக்குதல் ; துப்பாக்கிக் கட்டுப்பாட்டுக்கு அவுஸ்திரேலியா அங்கீகாரம்
கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி பொன்டி (Bondi) கடற்கரையில் 15 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தை அவுஸ்திரேலியாவின் கீழ்சபை நிறைவேற்றியுள்ளது.
96-க்கு 45 என்ற வாக்கு அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம், நாடு முழுவதும் தேசிய அளவிலான துப்பாக்கி மீட்புத் திட்டம் (Gun Buyback) அமுல்படுத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்போது பதிவு செய்யப்பட்ட 40 இலட்சம் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனுடன் இணைந்ததாக, யூத சமூகத்திற்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளைத் தண்டிக்கும் சட்டத் திருத்தமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘உள்ளத்தில் வெறுப்பையும், கையில் துப்பாக்கியையும்’ ஏந்தியவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) தெரிவித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, சாதாரண நபர்கள் 4 துப்பாக்கிகளையும், விவசாயிகள் 10 துப்பாக்கிகளையும் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமங்களைப் புதுப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலங்கள் இன்று மாலை செனட் சபையிலும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





