ஆஸ்திரேலியா – குடும்பத்தாரை காண புறப்பட்டு விமானத்திலேயே உயிரிழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்
இந்தியாவிலுள்ள தம் குடும்பத்தினரைக் காண்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் கிளம்பிய இந்திய இளம்பெண் ஒருவர், விமானத்திலேயே இறந்துபோனார்.கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
மன்பிரீத் கவுர், 24, என்ற அந்த இளம்பெண், கடந்த நாலாண்டுகளில் முதன்முறையாகத் தமது குடும்பத்தினரைக் காணும் நோக்கில் மெல்பர்ன் நகரிலிருந்து குவான்டாஸ் விமானம் வழியாக டெல்லிக்குக் கிளம்பினார்.ஆனால், விமானத்தில் ஏறியதும் இருக்கைவார் அணியவே மன்பிரீத் சிரமப்பட்டதாகவும் விமானம் கிளம்புவதற்குமுன் இருக்கைக்கு முன்னாலேயே விழுந்து, அங்கேயே இறந்துவிட்டதாகவும் குர்தீப் சிங் கிரேவால் என்ற அவருடைய நண்பர் தெரிவித்தார்.
விமான நிலையம் செல்வதற்கு முன்பே மன்பிரீத்திற்கு உடல்நலம் சரியில்லை என்றும் ஆனாலும் எப்படியோ அவர் விமான நிலையத்தைச் சென்றடைந்தார் என்றும் குர்தீப் கூறினார்.
விமான ஊழியர்களும் அவசர சேவைப் பணியாளர்களும் மன்பிரீத்திற்கு உதவ முயன்றதாக குவான்டாஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மன்பிரீத் ஆஸ்திரேலிய அஞ்சல்துறையில் பணியாற்றி வந்தார் என்றும் அவருக்குச் சமையல் வல்லுநராக ஆசை என்றும் அவருடைய அறைத்தோழி கூறினார்.
இதனிடையே, மன்பிரீத்தின் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் ‘கோஃபண்ட்மி’ எனும் பொது நிதிதிரட்டு தளம் மூலமாக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் குர்தீப்.
“மன்பிரீத் கவுருக்காக நிதி திரட்டி வருகிறேன். எனது கிராமத்தைச் சேர்ந்த மாணவியான அவர், சொந்த ஊருக்குச் செல்லவிருந்தார். ஆனாலும், மெல்பர்ன் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படத் தயாரான நிலையில், விமானத்திலேயே இறந்துவிட்டார்,” என்று குர்தீப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மன்பிரீத்தின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை விக்டோரியா மாநிலக் காவல்துறை தயாரித்து வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.