ஆஸ்திரேலியா – ஆபத்தான பூஞ்சைகளிடமிருந்து அரியவகைத் தவளைகளைக் காக்கும் நீராவிக் குளியலறை
ஆஸ்திரேலியாவில் அருகிவரும் தவளையினத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தவளைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப் புதிய முயற்சி ஒன்று கைகொடுத்துள்ளது.
சிட்னி நகரின் மெக்குவோரி பல்கலைக்கழக ஆய்வு நிலையத்தில் நீராவிக் குளியலறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அருகிவரும் ‘கிரீன் அண்ட் கோல்டன் பெல்’ எனும் பச்சை – தங்க நிறத் தவளைகள் குளிருக்கு இதமாக இந்த நீராவிக் குளியலறையில் வைக்கப்பட்டுள்ளன.மரணம் விளைவிக்கக்கூடிய ‘சைட்ரிட்’ பூஞ்சைத் தொற்றிலிருந்தும் தவளைகளை இது பாதுகாக்கிறது.
இந்த வகைப் பூஞ்சை ஆக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்கின்றனர் வல்லுநர்கள்.தவளைகளின் தோல் வழியாக அவற்றின் உடலில் புகுந்து படிப்படியாக மரணத்தை விளைவிக்கும்.
உலகெங்கும் இந்தப் பூஞ்சைத் தொற்றால் கிட்டத்தட்ட 500 வகை இருவாழ்வி விலங்கினங்களின் ( நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை) எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அத்தகைய 90 வகை இருவாழ்விகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர். அழிந்துபோனவற்றில் ஆறு வகைத் தவளைகள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவை.
சிறிய அளவிலான நீராவிக் குளியலறைகள் இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்துள்ளது. இந்த அறைகளுக்குள் இருக்கும் தவளைகள்மேல் ‘சைட்ரிட்’ பூஞ்சை வளர இயலாது.இந்தப் புத்தாக்க நடைமுறை குறைந்த செலவில் தவளைகள் மடிவதைத் தடுக்க உதவும். ஒரு நீராவிக் குளியலறையை அமைக்க 70 ஆஸ்திரேலிய டொலர் (S$62) செலவாகும்.
இருப்பினும் அனைத்து வகைத் தவளைகளுக்கும் இது பூஞ்சை போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்குமா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.