மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை முயற்சி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மனைவியை தீயிட்டு எரிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டிசம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
அம்பலாங்கொட ரண்தொம்பே பகுதியைச் சேர்ந்த தினுஷ நுவன் கொடிதுவக்கு என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர் மனைவியின் சகோதரரான மைத்துனரை குத்திக் கொலைசெய்த வழக்கு விசாரணை பலப்பிட்டிய நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மனைவியின் தம்பியை கொலை செய்தமை தொடர்பில் மனைவியின் தாயார் சாட்சியம் வழங்கக்கூடாதென மிரட்டியே, மனைவியை அறையொன்றில் வைத்து, நாற்காலியால் கட்டி வைத்து, தலையணை, போர்வைகள் போன்றவற்றால் மூடிவைத்து தீ மூட்ட குறித்த சந்தேகநபர் தயார் செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களினால் வழங்கிய சாட்சியங்கள் உறுதியானதையடுத்து அவரது மனைவியைக் கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.