ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார்
இலங்கை தேசிய கிரிக்கட் அணி மீதான அரசியல் அழுத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை வந்துள்ள ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மீதான அரசியல் அழுத்தத்தை ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
புதிய விளையாட்டு சட்டம் மற்றும் புதிய விளையாட்டு அதிகார சபையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிரிக்கட்டை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவரிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதே கலந்துரையாடலில் ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கைக்கு மேலும் இரண்டு சர்வதேச மைதானங்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு சர்வதேச மைதானங்கள் கட்ட வசதி செய்தால், இரண்டு மைதானங்கள் கட்டலாம் என்று ஜெய் ஷா கூறியிருந்தார்.
அத்துடன், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு விளையாட்டு மைதானம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.