அஸ்வெசும திட்டம் : போராடுவதற்கு பதிலாக மேன்முறையீடு செய்யுங்கள் – ஜீவன் தொண்டமான்!
அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”மக்களை வீதிகளுக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவதைவிட அவர்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பெயர் பட்டியலை தயாரிக்கும்போது பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற கோரிக்கை எம்மால் முன்வைக்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோருடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தி தீர்வொன்றை பெற்றிருந்தோம்.
அஸ்வெசும திட்டத்தில் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது எனக் கூறி தலவாக்கலையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என எண்ணத்தோன்றுகிறது. போலியான முறையில் தகவல்களும் பரப்பட்டு வருகின்றன. இதனை எம்மால் ஏற்க முடியாது.
அஸ்வெசும திட்டம் தொடர்பில் ஜுலை 10 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும். ‘ஒன்லைன்’ ஊடாகவும் பிரதேச செயலகங்களிலும் அதனை செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.