பாவெல் துரோவ் கைது ; பிரான்ஸுடனான போர் விமான ஒப்பந்தத்தை நிறுத்திய UAE
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
உலகின் பிரபல சமூக ஊடகமான டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், கடந்த வார இறுதியில் பிரான்ஸ் நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணைபோவதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், மேலும் பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவரது கைது நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்துவருகின்றன.
குறிப்பாக, இவரது கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் ரஷ்யா, அவரை மீட்கும் முயற்சியிலும் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில், “பாவெல் துரோவ்வின் கைது நடவடிக்கை அரசியல்ரீதியானது இல்லை” என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்சிடமிருந்து லெக்லெர்க் டாங்கிகள் மற்றும் ரஃபேல் போர் விமானங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொள்முதல் செய்துவருகிறது. அந்த வகையில், மேலும் 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்க யுஏஇ அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த நிலையில், துரோவ் கைது எதிரொலியால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக யுஏஇ அறிவித்துள்ளது.