போர்நிறுத்த ஒப்பந்தம் ; இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டது.
எனினும், ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை வெளியிட்டார். இந்த சூழலில், இஸ்ரேல் விதிமீறலில் ஈடுபட்டு விட்டது என ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டி அமைந்த இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று 2 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த புதன்கிழமை காலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், முதன்முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ள ஹிஸ்புல்லா, இதனை இஸ்ரேலுக்கான எச்சரிக்கை என தெரிவித்து உள்ளது.