சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக சிறு வயதிலேயே பல உடல்நல பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்து விடுகின்றன. மோசமான பழக்க வழக்கங்களால், உடல் உறுப்புகள் பாதிக்க தொடங்குகின்றன. இவற்றில் ஒன்று சிறுநீரக் கற்கள். இவை சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் குவிவதால் உருவாகும் சிறிய திட கனிமத் துகள்கள் ஆகும்.
சிறுநீர்க் குழாயில் கல் சிக்கிக் கொள்ளும்போது, அது கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் , சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மூலம் கல் உருவாகும் அபாயத்தை பெருமளவில் குறைக்க முடியும். நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளையும், அதிலிருந்து நிவாரணம் பெற உதவும் உணவுகள் எது என்பதையும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் உணவு முறைகளை (Health Tips), இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பல நேரங்களில் சிறுநீரகங்களில் கற்கள் இருப்பதை, வலி கடுமையாகும் வரை, யாரும் உணருவதில்லை. சிறுநீரக கல் உருவாவதற்கு ஒரு முக்கிய காரணம் தவறான உணவுமுறை மற்றும் குறைவான தண்ணீர் குடிப்பது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சிறுநீரக கற்கள் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
1. சிறுநீரக கற்கள் இருப்பதன் காரணமாக, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை உணரலாம்.
2. சிறுநீர் பாதையில் கற்கள் உராயும் போது, இரத்த கசிவு ஏற்பட்டு, அவை சிறுநீரில் கலப்பதால், சிறுநீரின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறமாக இருக்கலாம்.
3. சிறுநீரக கற்களால் சிறுநீரில் கழிவுகள் அதிகம் இருப்பதால், சிறு நீர் கழிக்கும் போது இயல்புக்கும் அதிகமாக நுரை ஏற்பலாம் .
4. சிறுநீரக கற்கள் சிறுநீர்க்குழாயை அடைத்துக் கொள்வதால், ஒரே நேரத்தில் சிறுநீர் முழுமையாக வெளியேற முடியாததால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகலாம்.
சிறுநீரக நோயாளிகளும், சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கவும் நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் (How to Prevent Kidney Stone)
1. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாள் முழுவதும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது சிறுநீரை நீர்க்கச் செய்து, தாதுக்கள் குவிவதைத் தடுக்கிறது.
2. எலுமிச்சை நீரில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
3. வெள்ளரி, தர்பூசணி, மாதுளை, கேரட் மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது கல் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
4. ஆப்பிள், திராட்சை மற்றும் அரிசி போன்ற குறைந்த ஆக்சலேட் உணவுகள். இவை சிறுநீரகங்களில் ஆக்சலேட் அளவை சமநிலையில் வைத்திருக்கின்றன.
சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கவும் நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
1. பசலைக் கீரை, பீட்ரூட் மற்றும் தக்காளி: இவற்றில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது, இது கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
2. அதிகப்படியான உப்பு சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது, இது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
3. அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது, குறிப்பாக சிவப்பு இறைச்சி அல்லது அசைவ உணவை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது.
4. காஃபின் மற்றும் குளிர் பானங்கள் உடலை நீரிழப்புக்கு உள்ளாக்குகின்றன, இது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.