அலுமினியப் பாத்திரங்கள் பயன்படுத்துபவரா நீங்கள் – காத்திருக்கும் ஆபத்து
பொதுவாக குக்கர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். சாதம் வைக்க, பருப்பு வேக வைக்க, பாயசம் தயாரிக்க என சகலத்துக்கும் பெரும்பாலானோர் தேடுவது குக்கரைத்தான்.
அதிலும் அலுமினியக் குக்கர்தான் பெரும்பான்மையான வீட்டு சமையலறையை அலங்கரிக்கும். அது மட்டுமல்ல, விலை மலிவு என்ற காரணத்துக்காக அலுமினிய வாணலிகள், இட்லி அவிக்கும் பானைகளையும் நாம் பெருமளவில் உபயோகிக்கிறோம். ஆனால், அவற்றில் உடலுக்கு மிகவும் தீமை செய்யும் விஷயங்கள் பலவும் இருக்கின்றன என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.
அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினிய உலோகம் உணவுப் பொருட்களுடன் வினைபுரியும் வாய்ப்பு உள்ளது. அவற்றைச் சாப்பிடுவதால் ஒரு நாளைக்கு 1 – 2 மில்லி கிராம் அளவிலான அலுமினிய மெட்டல் உடலில் கலக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அமில உணவுகளில் அலுமினியம் எளிதாகக் கலந்து விடும். அமில உணவு என்பது தக்காளி, புளி, தயிர் போன்றவை. நம் தென்னியந்திய சமையலில் கட்டாயம் இடம்பெறும் பொருட்கள் இவை.
புளிப்பு சுவை கொண்ட தக்காளி, புளி சேர்த்து அலுமினியப் பாத்திரங்களில் சாம்பார், ரசம், கூட்டு என்று சமைக்கும்போது, அந்தப் புளிப்பு சாறு அலுமினிய உலோகத்துடன் வினைபுரிந்து தீங்கு விளைவிக்கும் ரசாயன உப்புகள் மற்றும் சேர்மங்களை உற்பத்தி செய்யும். கீரைகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் ரசாயனங்கள் எளிதாக உடலில் சேர்கிறது.
நம் உடலில் சேரும் அலுமினியம், அதிகளவு உப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். மேலும் இது எலும்பு வளர்ச்சியை சிதைத்து மூட்டு வலியை வரவழைக்கிறது. நரம்பு மண்டல பாதிப்பு, மூளை செல்களின் வளர்ச்சியை தடுத்து அல்சைமர்ஸ் எனும் மறதி நோயையும், எண்ணச்சிதைவு நோயையும் உண்டாக்குகிறது.
நாம் பயன்படுத்தும் நான்-ஸ்டிக் தவாக்களின் அடிப்புறம் இருப்பது அலுமினியம் தான். எனவேதான், நான்-ஸ்டிக் பாத்திரங்களில் டெப்லான் கோட்டிங் உரிந்து வந்து விட்டால் அவற்றை உபயோக்கிக் கூடாது. அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தாமல், மண், இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது.