அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
உலகம் முழுவதும் பாஸ்ட் புட் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வேகமாக ஓடிக்கொண்டு இருந்து இந்த சூழலில் பலருக்கும் வீட்டில் சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை.
எனவே ஹோட்டல்களில் சாப்பிடுகின்றனர். சிலர் வீட்டில் பிரட் அல்லது உடனடியாக சமைத்து சாப்பிட கூடிய உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.
அந்த வகையில் நூடுல்ஸ் அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. 2 முதல் 3 நிமிடங்களுக்குள் இதனை சமைத்து சாப்பிட முடியும். எனவே பலரது வீடுகளில் நூடுல்ஸ் பிரதானமாகிவிட்டது.
உடனடியாக சமைத்து சாப்பிட முடியும் அதே வேளையில் விலையும் குறைவானதாக உள்ளது. நூடுல்ஸை பொதுவாக காலை, மாலை அல்லது இரவு நேரங்களில் மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்.
உடனடியாக செய்து சாப்பிட கூடிய நூடுல்ஸ் நாக்கின் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துகிறது மற்றும் சற்று நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
நூடுல்ஸில் சோடியம் அதிகம் சேர்க்கப்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து மதிப்பும் குறைவாக உள்ளது. நூடுல்ஸில் சேர்க்கக்கூடிய பொருட்கள் ஆரோக்கியமற்றதாக உள்ளன.
தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக கிடைக்க கூடிய நூடுல்ஸை சாப்பிடும் முன்பு இதனை சாப்பிடுவதால் ஏற்பட கூடிய பக்க விளைவுகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நூடுல்ஸின் பக்க விளைவுகள்
பொதுவாக நூடுல்ஸில் சுவையை அதிகரிக்க சோடியம் சேர்க்கப்படுகிறது. சோடியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சோடியம் உடலில் சேர்ந்தால் வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். எளிதில் செய்து சாப்பிட கூடிய இந்த நூடுல்ஸில் ஊட்டச்சத்து அளவு குறைவாக உள்ளது.
நூடுல்ஸில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ளது. எனவே உணவு தேவையை அவை பூர்த்தி செய்வதில்லை. மேலும் நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளன.
நூடுல்ஸில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக அஜீரணம் மற்றும் வீக்கம் ஏற்படலாம். மேலும் உடல் எடை அதிகரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல வளர்சிதை மாற்ற நோய்களை அதிகரிக்க செய்யும்.
இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். சில வகை நூடுல்ஸ்களில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நூடுல்ஸ் கெட்டுப்போகாமல் இருக்க MSG போன்றவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை அதன் சுவையை அதிகரிக்க செய்யும். ஆனால் இவற்றால் தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.