ஜெருசலேமில் இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தை கண்டுப்பிடித்த ஆய்வாளர்கள்!

இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் ஒரு தொல்பொருள் கண்டுபிடிப்பை ஆய்வாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அதாவது ஜெருசலேமில் உள்ள புனித கல்லறை தேவாலயத்தின் அஸ்திவாரத்திற்கு அடியில் ஒரு பழங்கால தோட்டத்தின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது யோவானின் நற்செய்தியுடன் ஒத்துப்போகிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது யோவான் 19:41 அதிகாரத்தில், : ‘அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில், ஒரு தோட்டம் இருந்தது; தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை இருந்தது, அதில் இதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அங்கே அவர்கள் இயேசுவை வைத்தார்கள்.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரோம் சபீன்சா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, அந்த இடத்திலிருந்து தாவர எச்சங்களை பகுப்பாய்வு செய்து, அவை கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்றும், இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்றும் திகதியிட்டுள்ளனர்.
வரலாற்றாசிரியர்கள் பொதுவாக அவரது மரணத்தை கி.பி 33 ஆம் ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர்.
தலைமை தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரான்செஸ்கா ரோமானா ஸ்டாசோலா, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் ‘சுவிசேஷம் கல்வாரிக்கும் கல்லறைக்கும் இடையில் ஒரு பசுமையான பகுதியைக் குறிப்பிடுகிறது, மேலும் இங்கு சாகுபடி செய்யப்பட்ட வயல்களை நாங்கள் அடையாளம் கண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.