யாழில் அநுர ஆற்றிய உரை சரியானதே: சாணக்கியன் சான்று!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஆதரிக்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் R. Shanakiyan தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதியின் உரையை சிலர் திரிவுப்படுத்தி இனவாதமாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார்.
“யாழிலுள்ள நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
வடக்கில் ஒரு விகாரையை மையப்படுத்தி குழுவொன்றால் முன்னெடுக்கப்படும் அரசியல் செயல்பாடு பற்றியே ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த செயலுக்கு நாம் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த குழுவினர் பற்றியே ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக சிங்கள மக்கள் வைராக்கியத்துடன் நாக விகாரையை வழிபட செல்கின்றனர் என்று ஜனாதிபதி கூறவில்லை.” எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
ஒரு பௌத்தர்கூட வாழாத இடத்தில் விகாரையை நிர்மாணித்து பேருந்தில் ஆட்களை அழைத்துச் சென்று குழப்பம் விளைவிக்க சிலர் முற்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக கடந்தகால ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி அநுர முதுகெலும்புடன் உரையாற்றியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
அதேவேளை, கதிர்காமத்துக்கு தமிழர்கள் செல்வது பற்றியும் குறித்தும் கருத்து வெளியிடப்பட்டது. இலங்கைக்கு பௌத்த மதம் வருவதற்கு முன்னரே கதிர்காம கந்தனை மக்கள் வழிபட்டனர்.” – என சாணக்கியன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.





