அரசியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆண்டனி பிளிங்கன்
அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் தென்கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வருகையளித்துள்ளார்.
அங்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் கொள்கைகளை தொடர அவர் ஊக்குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர் டே யூலையும் அவர் சந்திக்கிறார். கடந்த டிசம்பர் 3ஆம் திகதி ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்த அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜனவரி 6ஆம் திகதி அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைதாணை காலாவதியாகும் சமயத்தில் பிளிங்கனின் வருகை இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் முடியும் தறுவாயில் அவரது சாதனைகளை பறைசாற்றும் விதமாக நட்பு நாடுகளுக்கு பிளிங்கன் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் தென்கொரியா அவரது பயணத்தில் முதல் நாடாக இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக அவர் ஜப்பான் செல்கிறார்.
தென்கொரியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உரசல்கள் இருந்தாலும் அமெரிக்காவின் ஆதரவு அவ்விரு நாடுகளுக்கும் இருக்கும் என்பதை பிளிங்கனின் பயணம் காட்டுகிறது.
ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக விளங்குகிறது.
ஜப்பானுடன் மோதலைத் தவிர்க்கவும் உலகப் பிரச்சினைகளில் தென்கொரியா முக்கிய பங்காற்றவும் யூன் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளால் அவர் பைடன் நிர்வாகத்தின் அன்புக்குரியவராக இருந்தார்.மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜப்பானுடனான மாநாட்டில் பைடனுடன் சேர்ந்து திரு யூனும் பங்கேற்றார்.
ராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு உலகளாவிய ஜனநாயக உச்சநிலை மாநாட்டை வழிநடத்த அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது, வெளியேறும் பைடன் நிர்வாகத்தின் முக்கிய உத்தியாகப் பார்க்கப்பட்டது.