மேற்கு கரையில் இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கப் பெண்ணொருவர் பலி!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 வயது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.வெள்ளிக் கிழமை (செப் 7) நெப்லசுக்கு அருகேயுள்ள பெய்டா நகரில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐசெனுர் எஸ்கி எய்கி பங்கேற்றார்.அப்போது இஸ்ரேலியப் படைகள் எய்கியை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் பெண்ணான எய்கி, துருக்கி குடியுரிமையும் பெற்றவர்.
சம்பவம் குறித்த விவரங்களை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய தற்காப்புப் படை கூறியுள்ளது.பிபிசியிடம் பேசிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர், பாலஸ்தீன ஆதரவு அமைப்பான அனைத்துலக ஒருமைப்பாட்டு இயக்கத்தின் சார்பில் எய்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இதுவொரு எதிர்பாராத துயரமான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்துருக்கிய அதிபர் ரெஸெப் தாயுப் எர்டோகன், இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று சம்பவத்தை வருணித்துள்ளார்.
நெப்லஸ் நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவ வீரர்களால் எய்கி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று துருக்கிய அமைச்சு கூறியிருக்கிறது.இந்நிலையில் வெள்ளை மாளிகை, இஸ்ரேல் மீது பழி எதையும் சுமத்தாமல் இந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக வாஷிங்டனில் பேசிய வெள்ளை மாளிகையின் பேச்சாளரான மாத்யூ மில்லர், அவரது மரணத்தின் சூழ்நிலைகள் பற்றிய கூடுதல் விவரங்களை அவசரமாக சேகரித்து வருவதாகக் கூறினார்.
செல்வி எய்கி, அன்டாலியாவில் பிறந்தவர் என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இரட்டைக் குடியுரிமை பெற்ற எய்கி உடனடியாக நெப்லசில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.செல்வி எய்கி சேர்க்கப்பட்ட ரஃபிடா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் ஃபாவூத் நாஃபா, இருபது வயதுகளில் இருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் துப்பாக்கிக் குண்டால் மரணமடைந்ததை ஒப்புக் கொண்டார்.