ஐரோப்பாவை கைவிட்டுவிட்டு தென் கொரியாவிடம் முட்டை கேட்டு கெஞ்சும் அமெரிக்கா

அதிகரித்து வரும் முட்டை விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தென் கொரியா மற்றும் துருக்கியில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், நாட்டில் அதிகரித்து வரும் முட்டை விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயச் செயலாளர் புரூக் ரோலின்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்க அரசாங்கம் கடந்த இரண்டு மாதங்களாக பின்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் நெதர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் முட்டைகளை வழங்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறது.
அமெரிக்காவிற்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய பின்லாந்து ஏற்கனவே மறுத்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோழிப் பண்ணை நிலைமைகளை மேம்படுத்தவும், முட்டை உற்பத்தியை அதிகரிக்க இலவச ஆலோசனை சேவைகளை வழங்கவும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக கோழிகளிடையே பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் முட்டைகளின் விலை 65%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மேலும் 2025 ஆம் ஆண்டில் 41% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில், அமெரிக்க வேளாண்மைத் துறை முட்டை விலைகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் டாலர்களையும், தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 100 மில்லியன் டொலர்களையும், விவசாயிகளுக்கான நிதி நிவாரணத் திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர்களையும் பட்ஜெட் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.