அமேசான்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை
உலகின் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செலவினங்களைக் குறைக்கவும், நிர்வாகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும் அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசான் நிறுவனத்தில் 15 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் பெரும்பாலானோர் கிடங்குகள் மற்றும் விநியோக மையங்களில் பணிபுரிபவர்கள்.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அமேசான் நிறுவனம் சுமார் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
தற்போது அதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நிறுவனம் செயல்படுத்த வாய்ப்புள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் கார்ப்பரேட் பிரிவில் சுமார் 30,000 பணியிடங்களைக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையினால் அமேசானின் முக்கியப் பிரிவுகளான ஏ.டபிள்யூ.எஸ். (Cloud Computing) ,சில்லறை வர்த்தகம் (Retail), பிரைம் வீடியோ (Prime Video) ,மனிதவள மேம்பாட்டுத் துறை (HR) ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகையால் பணிகள் எளிமையாக்கப்படுவதே இந்த ஆட்குறைப்பிற்கு காரணம் என நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி கூறுகையில், “இது வெறும் நிதி ரீதியானதோ அல்லது AI சார்ந்ததோ மட்டும் அல்ல, நிறுவனத்தின் உள்ளே இருக்கும் தேவையற்ற அதிகார அடுக்குகளைக் குறைத்து (Bureaucracy), நிர்வாகத்தை வேகப்படுத்துவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நடக்கவிருக்கும் பணிநீக்கம் கார்ப்பரேட் பிரிவில் உள்ள சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பாதிக்கும்.
இது அமேசான் நிறுவனத்தின் 30 ஆண்டுகால வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான 90 நாட்கள் சம்பள காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட பணிநீக்கம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




