ஆபிரிக்கா: போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய வைரம்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது ஆகப் பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2,492 காரட் (498.4 கிராம்) எடைகொண்ட இந்த வைரத்தை கனடிய சுரங்க நிறுவனம் ஒன்று கண்டெடுத்துள்ளது. அந்நிறுவனம் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) இச்செய்தியை வெளியிட்டது.
போட்ஸ்வானாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் கரோவே வைரச் சுரங்கத்தில் வைரம் கண்டெடுக்கப்பட்டதாக லுக்காரா டயமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த வைரத்தின் மதிப்பு குறித்த கணிப்பை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
காரட் அளவைப் பொறுத்தவரை இது, 1905ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லினன் வைரத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது. கல்லினன் வைரத்தின் எடை 3,016 காரட் (603.2 கிராம்).
உள்ளங்கை பரப்பளவில் அமைந்துள்ள இந்த வைரத்தை லுக்காரா நிறுவனத்தின் போட்சுவானா கிளையில் நிர்வாக இயக்குநர் பதவியை வகிக்கும் திரு நசீம் லாஹ்ரி, அந்நாட்டு அதிபர் மொக்குவீட்சி மசிசியிடம் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) ஒப்படைத்தார்.
போட்ஸ்வானா, ஆக அதிக அளவில் வைரம் தயாரிக்கும் நாடுகளில் ஒன்று. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைர உற்பத்தி 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. மேலும் போட்சுவானா ஏற்றுமதி செய்யும் பொருள்களில் 80 சதவீதம் வைர ஏற்றுமதியாகும்.