அந்த பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை – உணர்ச்சிவசப்பட்ட யோகி பாபு
கேரளாவைச் சேர்ந்த நஜீப் வேலைக்காக அரபு நாடுக்குச் சென்று, அங்குள்ள முதலாளியால் ஏமாற்றப்பட்டு ஆடு மேய்க்கப் பணிக்கப்படுகிறார். பாலைவனத்தில் 700 ஆடுகளுடன் தன்னந்தனியாக வசிக்க நேர்கிறது.
ஒருகட்டத்தில் தன்னையும் ஒரு ஆடாக கருதிக் கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிலைமை மோசமாகிறது.
இந்த கடின காலத்தைத் தாண்டி எப்படி நஜீப் உயிர் பிழைத்தார் என்ற உண்மைச் சம்பவத்தை பென்யாமின் ஆடு ஜீவிதம் என்ற நாவலாக எழுத, அதனடிப்படையில் பிளெஸ்ஸி ஆடு ஜீவிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
14 வருட உழைப்பில் ஆடு ஜீவிதம் படம் உருவாகியிருக்கிறது. நஜீப்பாக பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. படத்தை சிறப்புத் திரையிடலில் பார்த்த கமல், மணிரத்னம் படத்தையும், இயக்குநர் பிளெஸ்ஸியையும், பிருத்விராஜையும் மற்றுமுள்ள படக்குழுவினரையும் பாராட்டினர். யோகி பாபுவும் படத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில், “இன்னும் அதன் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. வலிமிகுந்த இந்தப் பயணம், சினிமா விரும்பிகளுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும். த கோட் லைஃப். இதன் உயிரே பிருத்விராஜ்தான். மம்முட்டி, மோகன்லாலுக்குப் பிறகு ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்பு இன்னும் பல வருடங்களுக்கு நினைவுகூரப்படும். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சல்யூட்…” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியுள்ளார்.
ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் ஆடு ஜீவிதம் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து வருகிறது.