Tamil News

25 வருட பயணத்திற்கு முடிவு வைத்தார் கௌதமி… இப்படி ஒரு நிலையா?

பிரபல நடிகை கௌதமி பாஜகவுடனான தனது 25 ஆண்டுகால உறவை முடித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

நடிகை கௌதமி 125க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில், 46 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த இடத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய்.

குடும்ப சூழ்நிலையால் அவற்றை விற்பனை செய்து தருவதாக, கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர், என்னிடம் உறுதி அளித்தார். ஆனால், அவர் என் நிலத்தை அபகரித்துக்கொண்டார் என கௌதமி கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை கௌதமி எழுதிய கடிதத்தில், நான் 25 வருடமாக பாஜகவில் பணியாற்றி வருகிறேன். எனது வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டு இருக்கிறேன். தற்போது எனது வாழ்வில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு கட்டத்தில் நிற்கிறேன். இந்த சூழ்நிலையில் கட்சி தலைவர்களிடம் இருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை.

ஆனால், எனது சொத்தை அபகரித்தவருக்கு கட்சியினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த நபர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து, நான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்ததை ஏமாற்றியுள்ளார். 17 வயதிலிருந்தே சினிமா, தொலைக்காட்சி, வானொலி என 37 வருடங்களாக திரைத்துறையில் உழைத்து வருகிறேன்.

இப்போது நானும் எனது மகளும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன்.

மேலும், 2021 தேர்தல் சமயத்தில் ராஜபாளையத்தில் நான் கட்சிக்காக பணியாற்றினேன் . ஆனால் எனக்கு அந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தும் நான் கட்சிப்பணியை துவங்கினேன். 25 ஆண்டு காலம் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், முழுமையான ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக தலைமறைவாக இருக்கும் அழகப்பன் பற்றி தெரிந்தும் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன். எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாக நீதிக்காகப் போராடுவேன் என அந்த கடிதத்தில் நடிகை கௌதமி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version