நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் டெல்லியில் கைது

பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன், டெல்லியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021ம் ஆண்டு ஆகஸ்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2021ல் கேரளாவில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், 2022 ஆகஸ்ட் முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். அல்லி முன்பு நடந்த விசாரணையில், அவர் ஆஜராகத் தவறியதால், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, டெல்லி சட்டப்பணிகள் ஆணையத்தின் உதவியுடன், மீரா மிதுன் டெல்லியில் இருப்பதைக் கண்டறிந்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டபோது, மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், “பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல நானும் இருப்பேன்,” என்று கூறி வீடியோ வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.