சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் தமிழர்!

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13- ஆம் திகதியுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது.
அதற்கு முன்பே தேர்தலை நடத்தி சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், கடந்த மே மாதம் 29- ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், மக்கள் செயல் கட்சியின் மூத்த தலைவருமான 66 வயதான தர்மன் சண்முகரத்தினம் பிரதமர் லீ சியன் லூங்க்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதன் காரணமாக, தங்கள் தலைமையிலான சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்தும், மக்கள் செயல் கட்சிப் பதவியில் இருந்தும், அனைத்து அரசு சார்ந்த பொறுப்புகளில் இருந்தும் வரும் ஜூலை 07- ஆம் திகதி முதல் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், “தர்மன் சண்முகரத்தினத்தின் பதவி விலகல் அமைச்சரவைக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.