தாய்லாந்தில் தகனம் செய்யும் இறுதி நேரத்தில் சவப்பெட்டியில் இருந்து கேட்ட சத்தம்!
தாய்லாந்தின் பாங்காக்கின் (Bangkok) புறநகர்ப் பகுதியில் புத்த கோவிலில் தகனம் செய்யப்படவிருந்த பெண் ஒருவர் இறுதி நேரத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்துபோயுள்ளனர்.
கோவிலின் பொது மேலாளர் பைரத் சூத்தூப் (Pairat Soodthoop) சவப்பெட்டியில் இருந்து லேசான தட்டும் சத்தத்தை கேட்டப்பின்னர் திகைத்துப்போனதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சவப் பெட்டியை திறந்தப்பின்னர் குறித்த பெண் பக்கவாட்டில் படுத்திருந்ததாகவும், நீண்ட நேரமாக அவர் சவப் பெட்டியை தட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் உயிருடன் இருப்பதை அறிந்த கோயிலின் மடாதிபதி அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதுடன், குறித்த பெண் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த சக்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு சுவாசக் கோளாறு அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




