NPP அரசாங்கத்தை இயக்கும் தனி ஒருவன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பு!
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் NPP தனி நபர் ஆதிக்கம் இல்லை. உரிய வகையில் கலந்துரையாடி கூட்டு பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா Tilvin silva தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. JVP தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது.
நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“நான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி அல்லன். நான் ஜே.வி.பியின் செயலாளர் மட்டுமே…!
நான் எவருக்கும் அழுத்தம் பிரயோகிப்பது கிடையாது. அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இல்லை.
ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் தலைமையகம் பெலவத்தையில்தான் உள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு முன்னரும் நாம் அங்கிருந்துதான் முடிவுகளை எடுப்போம். தற்போதும் அங்கிருந்து கலந்துரையாடுவோம்.
அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் உரிய இடத்தில் எடுக்கப்படும். எமது கட்சி தலைமையகத்தில் கருத்தாடல் இடம்பெறும்.
பல யோசனைகள் வரும், அது பற்றி ஆராயப்பட்டு பெரும்பாலானோரின் தேர்வு ஏற்கப்படும்.
எனவே, பெலவத்தையில் கலந்துரையாடல் இடம்பெறும். ஆனால் பெலவத்தையில் இருந்து கொண்டு ஒருவர் இயக்குகின்றார் எனக் கூறப்படுவது தவறு.
ஏனைய கட்சிகளைப்போல தனிநபர் செல்வாக்கு செலுத்தும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் என்ற சிந்தனை அடிப்படையிலேயே செயல்படுகின்றோம். எம்மிடையே கூட்டு பொறுப்பு உள்ளது.
தனிநபர் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளுக்கு எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினம்.” – என்றார் டில்வின் சில்வா.





