மரண அபாயத்தை மதிப்பிட உதவும் ஒரு நிமிட எளிய சோதனை!

எதிர்காலத்தில் வரவிருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலக் குறைபாட்டுக்கான ஒரு குறிகாட்டியாக, நமது கைப்பிடியின் வலிமை உள்ளது என்று அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர் எட் ஜோன்ஸ் ஒரு பாட்காஸ்டில் கூறியுள்ளார்.
எடையை கையில் வைத்திருப்பதில் ஒருவரின் வலிமை குறைவாக அல்லது பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அது, தசை பிரச்சனை இருப்பதையும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் குறித்த சந்தேகத்தையும் வெளிப்படுத்துகிறது. எளிய 1 நிமிட சோதனையை முயற்சி செய்வதன் மூலம் ஆரம்பகால மரண அபாயத்தை மதிப்பிட முடியும். இந்த விரைவான 1 நிமிட சோதனையைச் செய்வது உங்கள் உடல்நலம் குறித்த மறைக்கப்பட்ட பல ரகசியங்களை எடுத்துரைக்கலாம்.
கிரிப் டெஸ்ட், நீண்ட கால தசை வலிமை, மூளை ஆரோக்கியம், இயலாமை மற்றும் ஒட்டுமொத்த நீண்ட ஆயுளைக் கண்டறிய உதவும் எளிதான மற்றும் வசதியான வழியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக வயதானவர்களில் இந்த சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கள் ஒரு பொருளை எவ்வாறு பிடிக்கிறீர்கள் அல்லது அதில் எவ்வாறு அழுத்தம் கொடுக்குறீர்கள் என்பதை வைத்து வயது தொடர்பான பல்வேறு நோய்களால் குறிப்பாக, இதய நோய், டைப் 2 நீரிழிவு, மூட்டுவலி மற்றும் சில புற்றுநோய்களால் இறக்கும் அபாயத்தில் உங்களது நிலை பற்றிய நியாயமான நோயறிதலை கண்டறிய உங்களுக்கு உதவும். ஒரு பொருளைப் பிடிக்க முயற்சிக்கும் போது, இந்த இயக்கத்திற்கு உங்கள் கையின் பல தசைகள் மற்றும் மூட்டுகளிலிருந்து வலிமை தேவைப்படுகிறது.
பலவீனமான பிடியின் வலிமை தசை இழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது இறுதியில் இயக்கத்தை இழக்க வழிவகுக்கும். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கும் காரணமாகலாம். எதிர்காலத்தில் வரவிருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலக் குறைவுக்கான ஒரு குறிகாட்டியாக பிடியின் வலிமை உள்ளது என்று அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர் எட் ஜோன்ஸ் ஒரு பாட்காஸ்டில் கூறியுள்ளார்.
உங்கள் உடல் எடையில் முக்கால் பங்கு எடையுள்ள டம்பல் போன்ற ஒரு கனமான எடையுள்ள பொருளை ஒரு நிமிடம் கையில் பிடித்துக் கொண்டு ஒருவர் பிடியின் வலிமையைச் சோதிக்க வேண்டும் என்று எட் ஜோன்ஸ் பரிந்துரைக்கிறார். இது ஆண்களுக்கு 85 கிலோவாகவும், பெண்களுக்கு 54 கிலோவாகவும் இருக்கலாம். இருப்பினும், கனமான பொருட்களைத் தூக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது முதுகில் பிடிப்பு அல்லது காயங்களை ஏற்படுத்தக்கூடும். ஒரு ஆண் பாதுகாப்பாக 25 கிலோவைத் தூக்க முடியும்/ அதே நேரத்தில் பெண்கள் 15 கிலோ வரை தூக்கலாம் என்று சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் (HSE) தெரிவித்துள்ளது.
உங்கள் எடையில் 3/4 பங்கு எடையுள்ள டம்பலை ஒரு நிமிடம் வரை வைத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் முன்னதாகவே இறக்க வாய்ப்புள்ளது என்று எட் ஜோன்ஸ் நியூட்ரிஷன் வேர்ல்ட் பாட்காஸ்டிடம் கூறினார். கொலஸ்ட்ரால் அளவை விட, பிடியின் வலிமை நீண்ட ஆயுளைக் கணிக்கும் ஒரு சிறந்த காரணியாக இருப்பதாக எட் ஜோன்ஸ் விளக்கினார். சரியான எடையுடன் இதை செய்ய முடிந்தால், உடல் மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தும் வலுவாக இருக்கும் என்று மேலும் கூறிய அவர், வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட உடல் மெதுவாக வயதாகிறது மற்றும் குறைவான நோயைக் கொண்டிருக்கும்.
மற்றொரு வலிமை சோதனை
நீங்கள் முயற்சி செய்யக்கூடிய மற்றொரு பிடியின் வலிமை சோதனை, புல்-அப் கம்பியில் முடிந்தவரை நீண்ட நேரம் தொங்குவது. இவ்வாறு தொங்குவதில், ஆண்கள் 60 வினாடிகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றாலும், பெண்களுக்கு இது 30 வினாடிகளுக்குக் குறைவாக இருக்கக்கூடாது.
பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (BMJ) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, புல்-அப் கம்பியில் 30 வினாடிகள் மட்டுமே பிடி வலிமையை கொண்ட ஆண்களுக்கும், 15 வினாடிகள் மட்டுமே கொண்ட பெண்களுக்கும் முன்கூட்டியே இறக்கும் அபாயம் இருப்பதாக கூறுகிறது.
தசை வலிமை, குறிப்பாக கைப்பிடி வலிமை, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
சர்வதேச சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதார இதழின் படி, இது எளிய தசை செயல்பாட்டை சோதிக்க ஒரு பொதுவான வழியாகும். மேலும் இது உடல் செயல்பாடு மற்றும் உயிரியல் வயதில் குறிப்பிட்ட சரிவைக் குறிக்கலாம்.
கைப்பிடியின் வலிமை, முழு உடலின் வலிமையையும் பிரதிபலிக்கும் மற்றும் வயதான நபர்களின் உடல்நலப் பிரச்சனைகளை மதிப்பிடுவதற்கு இது ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும்.
கைப்பிடியின் வலிமை குறைவது அறிவாற்றல், இயலாமை, பலவீனம், வீழ்ச்சி, மருத்துவமனை செலவுகள் மற்றும் இறப்பு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளைக் குறிக்கலாம்.