பாலஸ்தீன அரசு ஒரு போதும் உருவாகாது – இஸ்ரேல் பிரதமர் உறுதி

காசாவில் ஹமாசுக்கு எதிரான வேலையை முடிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.
ஐநா சபையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று பேசிய போது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
“காசாவில் ஹமாசுக்கு எதிரான வேலையை இஸ்ரேல் முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மேற்கத்திய தலைவர்கள் அழுத்தத்திற்கு அடிபணிந்திருக்கலாம். ஆனால் ஒரு போதும் இஸ்ரேல் அதை செய்யாது.
பாலஸ்தீன அரசை பல நாடுகள் அங்கீகரிக்கின்றன. உங்கள் அவமானகரமான முடிவு யூதர்களுக்கு எதிராகவும், எல்லா இடங்களிலும் அப்பாவி மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்.
பாலஸ்தீன அரசை உருவாக்குவது ஹமாசுக்கு வெகுமதி அளிக்கும் செயலாகும். அது ஒருபோதும் நடக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச தொடங்கும் போது ஐ.நா. பொதுச் சபையில் இருந்து ஏராளமான தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் வெளியேறினார்கள். அந்த நேரத்தில் சாபம் என்ற தலைப்பில் இஸ்ரேல் பிராந்திய வரைபடத்தை அவர் உயர்த்தி பிடித்து பேசினார்.