தமிழகத்தில் பால் வண்டி ஒட்டுநரின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த செவிலியர்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் பால் வண்டி ஓட்டுநர் கவனக்குறைவாக கதவை திறந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ஜெயந்தி(44) என்ற செவிலியர் தடுமாறி விழுந்ததில் அவர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயந்தி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது மறவப்பட்டி பகுதியில் கணவர் நாராயணன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவ கல்லூரியில் தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் சாலையோரத்தில் பால் இறக்கி கொண்டிருந்த பிக்கப் பொலிரோ வாகன ஓட்டுனர் தட்சிணாமூர்த்தி (19) கவனக்குறைவாக கதவை திறந்த போது அதில் ஜெயந்தியின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி ஜெயந்தி சாலையில் விழுந்த போது தேவகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது ஏறி இறங்கியது. இதில் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த ஜெயந்தியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் விபத்தில் உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.