கண்ணில் இருந்து இரத்தம் வழியும் புதிய வைரஸ் : மக்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
குரங்கம்மை வைரஸைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவை உலுக்கி வரும் மற்றுமோர் வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ப்ளீடிங் ஐ வைரஸ் என்ற நோய் பரவி வருகிறது.
குறிப்பாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. இதனால் ருவாண்டாவில் மட்டும் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியுள்ளது.
இந்நிலையில் பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட இந்த 15 நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்குப் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்பர்க் மட்டுமின்றி கிளேட் 1 மற்றும் ஓரோபூச் காய்ச்சலும் இங்குப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்த வைரஸ் நமக்குப் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை 3வது நாளில் இருந்து ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
5ம் நாள் முதல் வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் தென்படத் தொடங்கும். மேலும், மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கும். சில நேரம் ஆண்களுக்கு ஆணுறுப்புகள் வீங்கவும் செய்யும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரத்தப் போக்கு காரணமாக உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.
பொதுவாக இந்த ப்ளீடிங் ஐ வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்போருக்கே இந்த வைரஸ் முதலில் ஏற்படுகிறது. மேலும், இந்த வைரஸால் ஒருவர் உயிரிழந்து, அவருக்கு இறுதிச் சடங்கு நடக்கும் போதும் கூட இந்த உடலுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவோருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரில் சுமார் 50% பேர் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது. இதுவே இதை மிகவும் கொடிய வைரஸாக மாற்றுகிறது. அதேநேரம் தற்போது வரை இந்த கொடூர வைரஸுக்கு தடுப்பூசிகள் அல்லது தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது