சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்றவரால் பரபரப்பு

சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார்,ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர்.
விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை,விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார்.
எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள அவசரசூழ்நிலையில் வெளியேறுவதற்கான கதவை ஏன் இந்த நபர் திறக்க முயன்றார் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குறிப்பிட்ட விமானம் மலேசிய தலைநகரிலிருந்து பயணித்துக்கொண்டிருந்ததாகவும், இந்த நபர் விமானத்தின் கதவுகளை திறக்க முயன்றதை தொடர்ந்து விமானபணியாளர்கள் அவரை விமானத்தின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர் . இதன் போது அந்த நபர் விமான பணியாளர் ஒருவரை தாக்கினார் என குறிப்பிட்டுள்ளது.
சிட்னியில் விமானம் இறங்கியதும் அவுஸ்திரேலிய பொலிஸார் உடனடியாக விமானத்திற்குள் ஏறியுள்ளனர். ஜோர்தான் நபர் இழைத்த குற்றங்களிற்காக பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் செயலால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்,விமானப்பயணங்களின் போது பயணிகளும் விமானபணியாளர்களும் இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளை எதிர்கொள்ளக்கூடாது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் பயணிகள் அல்லது பணியாளர்களின் பாதுகாப்பினை எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ள எயர்ஏசியா பணியாளர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தனர்,எந்த விதமான பொருத்தமற்ற செயற்பாடுகளையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளது.