தொழில்நுட்ப துறையில் மாபெரும் புரட்சி – இனி மருத்துவத் துறையில் AI
AI என்ப்படும் Artificial Intelligence தற்போது அனைத்து துறைகளிலும் ஊடுறுவி வருகிறது. மனிதனின் வேலைகளை எளிதாக்கும் வகையில் இந்த செயற்கை நுண்ணறிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நோயைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற செயற்கை நுண்ணறிவு கருவியான சாட்பாட்டை, அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமணைகளில் சோதனை முயற்சியாக தற்போது பயன்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம்.
மருத்துவ துறையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது செயற்கை நுண்ணறிவு. மினியெஸ்டோவில் உள்ள மேயோ க்ளினிக்கில் கூகுள் நிறுவனம் நடத்திய சோதனை முயற்சியை பார்த்த போதே, இது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
Med-PaLM-2 என அழைக்கப்படும் இந்த சாட்பாட், மருத்துவ கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியதாகவும் பல்வேறு அறிகுறிகளின் அடிப்படையில் சரியான நோயைக் கண்டறியக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தரவுகளை ஒருங்கிணைப்பது அல்லது நோயாளிகளின் மருத்துவ கோப்புகளில் உள்ள விவரங்களை சுருக்கமாக கூறுவது போன்ற நிர்வாக பணிகளையும் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டால் திறம்பட செய்ய முடியும்.
மேலும் எதிர்கால இலக்கு எனக் கூறி, இப்போதே எக்ஸ்ரே-வை ஆய்வு செய்யும் பணியும் தொடங்கிவிட்டது. இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த சாட்பாட், பல்வேறு மருத்துவ ஆவணங்கள் மற்றும் மருத்துவ தேர்வுகளில் இருந்து பெறப்பட்ட பல்வேறு கேள்வி/பதில்கள் ஆகியவற்றை உள்ளிட்டு மொழியியல் மாதிரிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறைந்த நிபுணத்துவம் கொண்ட சாட்ஜிபிடி-யை விட மருத்துவ துறையில் இது பல வகையிலும் பயனுள்ளதாகவும் நம்பகமானதாகவும் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவால் எதிர்காலத்தில் பல வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என ஒருபக்கம் பயமும் கவலையும் இருந்தாலும், மருத்துவத் துறையில் இது செய்யக்கூடிய விஷயங்கள் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.