ஹங்வெல்லையில் தனது இரண்டு பிள்ளைகளையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள தந்தையால் பரபரப்பு
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹன்வெல்ல ஜல்தாரா அரச ஊழியர் வீடமைப்பு வளாகத்தில் கைக்குண்டுடன் தனது பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஏற்கனவே தனது பிள்ளைகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைக் கொல்லும் நோக்கில் சந்தேக நபர் கைக்குண்டை ஏந்தியவாறு வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும், மனைவி வீட்டில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது இரு குழந்தைகளையும் பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு குழந்தைகளையும் மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.