சிங்கப்பூரில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பழக்கம்
சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்திய 800 மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் அவர் அது பற்றிய கேள்விக்குப் பதில் தந்தார். கடந்த ஐந்தாண்டில் மாணவர்களிடையே மின்சிகரெட் பழக்கத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்குமுன் சுமார் 50 மாணவர்களே சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என்று மாலிக்கி குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் மாணவர்களிடையிலும் பொதுவாகச் சமூகத்திலும் மின்சிகரெட் பரவுவது குறித்துக் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் கவலை அடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அத்தகைய குற்றத்திற்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.