ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை!
“ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.”
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகளாகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake சபையில் இன்று (08)கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
“ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உரிய விசாரணைகளின்மூலம் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது.
எனினும், இன்னும் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் ஊடக அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





